இந்தியாவிலுள்ள 167 கத்தோலிக்க மறைமாவட்டங்களில் 130 இலத்தீன் வழிபாட்டுமுறையையும், 29 சீரோ மலபார் வழிபாட்டுமுறையையும் 8 சீரோ மலங்கரா வழிபாட்டுமுறையையும் கொண்டவை. புனிதர்கள் மார்த் அல்போன்சா, குரியாக்கோஸ் எலியாஸ் சவ்ரா, யூப்ராசியா எலுவத்திங்கல் ஆகிய மூவருமே சீரோ மலபார் வழிபாட்டுமுறையைச் சார்ந்தவர்கள்.
புனித குரியாக்கோஸ் எலியாஸ் சவ்ரா அவர்கள், சீரோ மலபார் வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவையில் ஆண்களுக்கென தொடங்கப்பட்ட முதல் துறவு சபையின் இணை நிறுவனர் மற்றும் அச்சபையின் முதல் அதிபராவார். இத்துறவு சபை, கார்மேல் அமலமரி சபை என அழைக்கப்படுகிறது. இதேபோல், இதே வழிபாட்டுமுறையில் பெண்களுக்கென கார்மேல் அன்னை சபையும் தொடங்கப்பட்டது. இப்பெண்கள் சபையைச் சார்ந்தவர், இஞ்ஞாயிறன்று புனிதராக அறிவிக்கப்படவுள்ள மற்றொரு புனிதர் யூப்ராசியா எலுவத்திங்கல். CMC சபை என சுருக்கமாக அழைக்கப்படும் இச்சபையின் இச்சகோதரி, யூப்ராசியம்ம்மாள் எனவும் அழைக்கப்படுகிறார்.
கேரளாவின் கைனக்கரியில் புனித தாமஸ் கிறிஸ்தவக் குடும்பத்தில் 1805ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பிறந்த குரியாக்கோஸ் எலியாஸ் சவ்ரா, தனது கிராமத்துப் பள்ளியில் கல்வி கற்றார். 1818ம் ஆண்டில் பள்ளிபுரம் குருத்துவக் கல்லூரியில் இவர் சேர்ந்தபோது அதன் தலைவராக இருந்தவர் அருள்பணி தாமஸ் பளக்கல்.
1829ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி குருத்துவ திருப்பொழிவு பெற்ற குரியாக்கோஸ், அருள்பணியாளர்கள் பளக்கல் தாமஸ் மால்பான், பொர்க்காரா ஆகிய இருவருடன் சேர்ந்து ஆதீன வாழ்வு வாழத் தொடங்கினார். இவர்கள் மூவரும் தாங்கள் தொடங்கிய குழுவுக்கு அமலமரியின் ஊழியர்கள் என்று பெயர் வைத்தனர். 1831ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி மண்ணனம் என்ற ஊரில் முதல் ஆதீன இல்லத்தை இவர்கள் தொடங்கினர்.
இதற்கிடையே, 1841, 1846ம் ஆண்டுகளில், அருள்பணியாளர்கள் பளக்கல் தாமஸ் மால்பான், பொர்க்காரா ஆகிய இருவரும் இறந்தனர். பின்னர் அருள்பணி குரியாக்கோசும், இன்னும் பத்து அருள்பணியாளர்களும் கார்மேல் சபை மரபின்படி முதல் வார்த்தைப்பாடு கொடுத்தனர். மண்ணனம் ஆதீனத்தின் முதல் அதிபராக அருள்பணி குரியாக்கோஸ் நியமிக்கப்பட்டார். பின்னர் இந்த ஆதீனம், செருப்பு அணியாத கார்மேல் சபையின் மூன்றாம் நிறுவனத்தோடு தொடர்பு ஏற்படுத்தியது.
அருள்பணி குரியாக்கோஸ், கேரளாவில் முதல் முறையாக பொதுநிலை விசுவாசிகளுக்கு தியானம் கொடுத்தார். செபமாலை, சிலுவைப்பாதை, திருநற்கருணை ஆராதனை போன்ற பொதுவான பக்தி முயற்சிகளைப் பரப்பினார். மேலும், இந்திய சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி வழங்குவதில் ஆர்வம் காட்டி ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். ஒவ்வோர் ஆலயத்துக்கு அருகிலும் ஒரு பள்ளிக்கூடம் அமையுமாறு செய்தார்.
இலவசக்கல்வி முறையையும் கொண்டு வந்தார். பெண்களின் அறிவு வளர்ச்சியில் ஆர்வம் காட்டினார். 1866ம் ஆண்டில் பெண்களுக்கென ஒரு துறவு சபையையும் ஆரம்பித்தார். மண்ணனம் என்ற ஊரில் இந்திய கத்தோலிக்கத் திருஅவைக்கென முதல் அச்சகத்தை ஆரம்பித்தார். இந்த அச்சகத்திலிருந்தே மலயாள மொழியில் முதலில் வெளிவந்த நாளிதழ் ‘தீபிகா’ பிரசுரமானது. அருள்பணி குரியாக்கோஸ் தனது 66ம் வயதில் 1871ம் ஆண்டு சனவரி 3ம் தேதி இறந்தார். புனித குரியாக்கோஸ் எலியாஸ் சவ்ரா அவர்களின் விழா சனவரி 03.