இறைவன் திருவுளம் கொண்டால் வரும் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஃபிலடெல்ஃபியாவில் இடம்பெறும் எட்டாவது உலக குடும்ப மாநாட்டிற்கு, தான் செல்லவிருப்பதாக இத்திங்களன்று காலையில் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரில் முழுமையடைதல்’ என்ற தலைப்பில் திருப்பீடத்தால் ஏற்பாடுச் செய்யப்பட்ட உலகக் கருத்தரங்கில் பங்குபெற்றோரை இத்திங்களன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தன் திருப்பயணம் குறித்துத் தெரிவித்ததுடன், ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரில் முழுமையடைதல் என்பது குறித்தும் விளக்கினார்.
ஒருவரின் குறைபாட்டை மற்றவர் நிறைவுச் செய்வது என்ற அர்த்தத்தில் மட்டும் நாம் நோக்கக்கூடாது என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள கொடைகளை அனைவரின் நலனுக்காக பயன்படுத்தி ஒன்றிப்பில் வாழ்வதை இது குறிப்பிடுகின்றது என்று கூறினார்.
குடும்பங்களிலேயே இதை நாம் முதலில் கற்றுக்கொள்கின்றோம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கணவனும் மனைவியும் தங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்டக் கொடைகளோடு மற்றவர்களை நிறைவுச் செய்வதுடன், ஒன்றிணைந்த முயற்சியில் குழந்தைகளின் கல்விக்கும் உதவுகின்றனர் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.