நாம் இறைவனை உற்றுநோக்கும் அதேவேளை, அவரின் தேவைகளை உற்றுநோக்கத் தவறிவிடுகிறோம் என்று இத்திங்கள் காலை ஆற்றியத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரை வழங்கினார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலை வழங்கிய மறையுரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘நான் பசியாயிருக்கிறேன், தாகமாயிருக்கிறேன், சிறையிலிருக்கிறேன், நோயுற்றிருக்கிறேன்’ என்று இறைமகன் இயேசு வெளிப்படுத்திய தேவைகளைக் குறித்து நாம் சிந்திக்கிறோமா என்ற கேள்வியை முன்வைத்தார்.
ஆயர்களாக, அருள் பணியாளர்களாக, பொதுநிலை விசுவாசிகளாக இறைவனோடு எப்போதும் இணைந்து, அவரை உற்றுநோக்கும் நாம், இறைவனின் தேவைகள் குறித்து அக்கறையற்றவர்களாக இருக்கிறோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மைச் சுற்றியிருக்கும் ஏழை சகோதர, சகோதரிகளின் தேவைகளை நிறைவுசெய்யும்போது, இறைவனின் தேவைகளை நிறைவு செய்கிறோம் என்று எடுத்துரைத்தார்.
நம்மை அன்புகூர்ந்ததுடன், நம்மை அழைத்து நமக்கு மீட்பை வழங்கிய இறைவன், நாம் நலமுடன் வாழவே ஆவல் கொள்கிறார்; அவர்மீது நாம் கொள்ளும் அன்புடன், நாம் பிறரையும் அன்புகூரும்போது இறை ஆவல் நிறைவேறுகிறது என்று மேலும் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.