“அருளடையாளங்களின் ஆன்மீகச் சக்திக்கு எல்லையில்லை, திருவருளால் ஒவ்வொரு தடையையும் நம்மால் மேற்கொள்ள இயலும்” என்ற வார்த்தைகளை, தனது டுவிட்டரில் இச்ச்னிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், கானடா நாட்டுப் புனிதர்கள் ஆயர் Francis de Montmorency Laval, அருள்சகோதரி மனிதஉருவின் மரி ஆகிய இருவருக்கும் நன்றித் திருப்பலியை இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வட அமெரிக்காவில் பிரான்ஸ் நாட்டவரின் காலனியாக இருந்த நியு பிரான்சில் கத்தோலிக்கத் திருஅவையை உருவாக்கிய ஆயர் de Laval, நியு பிரான்சில் பெண்களுக்கென முதல் பள்ளியைத் தொடங்கிய அருள்சகோதரி மனிதஉருவின் மரி ஆகிய இருவரையும் கடந்த ஏப்ரல் 3ம் தேதி புனிதர்களாக அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனிதர்களாக உயர்த்தப்படுவதற்கு குறைந்தது ஒரு புதுமை அவசியம் என்று இருந்தாலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்விருவரையும் புனிதர்களாக அறிவித்தார்.
இவ்விரு புனிதர்களும் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர்கள்.
நியு பிரான்ஸ் என்பது, 16ம் நூற்றாண்டில் வட அமெரிக்காவில் பிரான்ஸ் நாட்டவரின் காலனிப் பகுதியாகும். இக்காலனி ஆதிக்கம், 1534ம் ஆண்டில் Jacques Cartier என்ற ப்ரெஞ்ச்க்காரர், வட அமெரிக்காவில் செயின்ட் லாரன்ஸ் நதியை ஆராய்ச்சி செய்யத் தொடங்கியதிலிருந்து 1763ம் ஆண்டில் பிரான்ஸ் நாடு, இப்பகுதியை இஸ்பெயினுக்கும் பிரித்தானியாவுக்கும் வழங்கும்வரை நடைபெற்றது.