அடுத்த ஆண்டு சனவரி 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கைக்கும் பிலிப்பீன்ஸ்க்கும் திருப்பயணம் மேற்கொள்வார் என்று இவ்வெள்ளியன்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சனவரி 13ம் தேதி செவ்வாயன்று இலங்கைத் தலைநகர் கொழும்பு செல்லும் திருத்தந்தை, 15ம் தேதி வியாழனன்று பிலிப்பீன்ஸ் சென்று 19ம் தேதி திங்கள்கிழமை உரோம் திரும்புவார் எனவும் அச்செய்தித் தொடர்பகம் மேலும் கூறியது.
14ம் தேதி காலை 8.30 மணிக்கு கொழும்பு நகரின் Galle Face Green பூங்காவில் அருளாளர் ஜோசப் வாஸ் அவர்களைப் புனிதராக அறிவிக்கும் திருத்தந்தை, 14ம் தேதி மாலை 3.30 மணிக்கு மடுமாதா திருத்தலம் சென்று உரையாற்றுவார். அடுத்தநாள் Bolawalana இலங்கை அன்னைமரியா திருத்தலமும் செல்வார் திருத்தந்தை.
பிலிப்பீன்ஸில் 2013ம் ஆண்டில் ஹையான் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலரைச் சந்திப்பார் மற்றும் அவர்களுடன் உணவருந்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு சனவரி 12ம் தேதி முதல் 19ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் இத்திருப்பயணம், ஆசியாவுக்கு திருத்தந்தை மேற்கொள்ளும் இரண்டாவது திருப்பயணமாகும்.