ஈராக்கின் மோசுல் மற்றும் நினிவே பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ள ஏறக்குறைய ஒரு இலட்சத்து இருபதாயிரம் புலம்பெயர்ந்தோர் குறித்து அந்நாட்டு முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்கள் கவலையை வெளியிட்டுள்ளார்.
ஐஎஸ் இஸ்லாம் நாட்டின் தீவிரவாதிகள் கடவுளின் பெயரால் நடத்தும் வன்முறைகளை, எதனாலும் நியாயப்படுத்த முடியாது, இவ்வன்முறைகள் உண்மையில் பொருளாதார ஆதாயங்களுக்காக நடத்தப்படுகின்றன என்றுரைத்துள்ள முதுபெரும் தந்தை, இத்தகைய வன்முறைகளுக்கு 1,20,000 மக்கள் தங்களின் வாழ்வை விலைகொடுத்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
சனநாயகம், சீர்திருத்தங்கள், மாற்றங்கள் போன்றவை பற்றி ஒவ்வொருவரும் பேசுகின்றனர், ஆனால், ஜிகாத் மனநிலையை வேரோடு அறுத்தெறியும் புதுவிதமான கல்வியே முக்கியமாகத் தேவைப்படுகின்றது என்றும் கூறினார் முதுபெரும் தந்தை சாக்கோ.
தற்போது நடந்துவரும் மோதல்கள் பற்றி ஒயாசிஸ் என்ற இத்தாலிய இதழுக்குப் பேட்டியளித்த முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், குளிர்காலம் நெருங்கி வருகிறது, சிறார் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்ற கவலையை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய மோதல்களில் ஈடுபட்டுள்ள பல்வேறு குழுக்கள் மத்தியில் உரையாடல் இடம்பெற்றால் மட்டுமே, வன்முறைகளின் யுக்திகளிலிருந்து வெளியேற இயலும் என்றும் பேட்டியில் கூறியுள்ளார் ஈராக்கிய முதுபெரும் தந்தை சாக்கோ.