வன்முறைகளால் சூழப்பட்டுள்ள இவ்வுலகில் வாழும் நமக்கு, வன்முறையற்ற வழிகளே உயர்ந்த கோட்பாடுகளாக விளங்க வேண்டும் என்று சிரோ மலபார் திருஅவையின் உயர் தலைவர், கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் கூறினார்.
Bosnia மற்றும் Herzegovina நாட்டின் தலைநகரான Sarajevo வில், “வன்முறை என்ற சோதனை: போருக்கும், ஒப்புரவுக்கும் இடையே மதங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள் இவ்வாறு கூறினார்.
1893ம் ஆண்டு, சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தா ஆற்றிய புகழ்மிக்க உரையிலிருந்து பல மேற்கோள்களை எடுத்துரைத்த கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள், சகிப்புத் தன்மை கொண்ட ஆசிய மக்கள் உலகெங்கும் வாழும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் என்று எடுத்துரைத்தார்.
இந்தியாவை ஆண்ட அசோகர், அக்பர் ஆகிய மாமன்னர்கள் பல்வேறு மதங்களையும், கலாச்சாரங்களையும் வளர்ப்பதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தனர் என்பதையும் தன் உரையில் சுட்டிக் காட்டிய கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள், தற்போது இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து, வன்முறைகள் பெருகியுள்ளது குறித்து வருத்தம் தெரிவித்தார்.