இயேசுவே உயிருள்ள உணவு, அந்த உணவால் மட்டுமே மனிதரின் மிக ஆழமான ஆவல்களைத் திருப்தி செய்ய இயலும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் மாலை கூறினார்.
வத்திக்கானில் இவ்வியாழனன்று இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் இவ்வியாழன் மாலை நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உடல் பசியோடு மனிதருக்கு மற்றுமொரு பசி இருக்கின்றது, அது வாழ்வதற்கான பசி, அன்புக்கான பசி, பேரின்ப வாழ்வுக்கான பசி, இந்தப் பசியை, சாதாரண உணவினால் போக்க முடியாது என்றுரைத்தார் திருத்தந்தை.
கத்தோலிக்க விசுவாசத்தை வாழ்வதென்பது, உலகப் பொருள்களின்மீது வாழ்வைக் கட்டியெழுப்பாமல், அழியாத உணவாகிய ஆண்டவரால் ஊட்டமளிக்கப்படுவதற்கு உங்களைக் கையளிப்பதாகும் என்று, அத்திருப்பலியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இவ்வுலகில் சிலர் பணத்தாலும், இன்னும் சிலர் வெற்றி மற்றும் வீண் தற்பெருமையாலும், மேலும் சிலர் அதிகாரம் மற்றும் செருக்கினாலும் தங்களுக்கு ஊட்டமளிக்கின்றனர், இவை திருப்தியை அதிகமாக அளிப்பதுபோல் தோன்றலாம், ஆனால் இவை அடிமையின் மேஜையில் உண்ணப்படுபவை என்பதை மக்கள் மறக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
நீங்கள் எங்கே உணவருந்த விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை விசுவாசிகளிடம் முன்வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, இந்த உலகின் போலியான உணவைத் தவிர்க்குமாறும், இறைவனின் உணவே உண்மையிலே திருப்திப்படுத்தவல்லது என்பதை நினைவில் வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.