இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடி அவர்களையும், பாரதிய ஜனதா கட்சியையும் இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை வாழ்த்துவதாக, இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் மார் பசிலியோஸ் கிளீமிஸ் தொட்டுங்கல் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னேற்றம், சகோதரத்துவ பேச்சுவார்த்தைகள், சமூகப் பணிகள் போன்ற உயர்ந்த நிலைப்பாடுகளில் அர்ப்பணத்துடன் இதுவரை பணியாற்றிவந்த இந்தியத் திருஅவை, அந்த அர்ப்பணத்தைப் புதுப்பித்து, தொடர்ந்து பணியாற்றத் தீர்மானித்துள்ளது என்று கூறினார் கர்தினால் கிளீமிஸ்.
இந்திய அரசை அமைக்கவிருப்போர், எப்போதும் மக்கள் பக்கமாக, குறிப்பாக, ஏழைகள், மற்றும் மத சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்று தான் இறைவனிடம் வேண்டுவதாகவும், சீரோ மலங்கரா திருஅவையின் தலைவர், கர்தினால் கிளீமிஸ் அவர்கள் கூறினார்.
மிகத் தொன்மை மிகுந்த கலாச்சாரத்தைக் கொண்டுள்ள இந்திய நாடு, இறைநம்பிக்கையில் தன் ஆதாரத்தைக் கொண்டுள்ளது என்பதைச் சுட்டிகாட்டிய கர்தினால் கிலீமிச் அவர்கள், இந்து, புத்தம், சமணம், சீக்கியம் ஆகிய அனைத்து மதங்களின் பிறப்பிடம் இந்தியாவே என்பதையும் எடுத்துரைத்தார்.