உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துச் செய்தி

nn‘நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்.

அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்’ (மத் 28:5-6) என வானதூதர் பெண்களைப் பார்த்து கூறிய வார்த்தைகளை திருஅவை உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
நற்செய்தியின் மணிமகுடம் இதுவே. சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்துவிட்டார் என்ற நற்செய்தி வேறு எதனுடனும் ஒப்பிடமுடியாத உன்னத செய்தி. இந்நிகழ்வே நம் விசுவாசம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படை. கிறிஸ்து உயிர்த்தெழவில்லையெனில் கிறிஸ்தவம் தன் அர்த்தத்தையே இழந்துவிடும். மற்றும், அதன் பணிநோக்கத்தின் உயிர்துடிப்பும், தூண்டுதலும் இழக்கப்பட்டுவிடும்.

ஏனெனில், இந்த உயிர்ப்பு எனும் துவக்கப் புள்ளியிலிருந்துதான் கிறிஸ்தவம் தன் பயணத்தைத் துவக்கியது, மற்றும், என்றென்றும் புதுப்பித்தலுடன் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. மனித உருவெடுத்த அன்பு எனும் இயேசு, நம் பாவங்களுக்காக சிலுவையில் உயிர்விட்டார். ஆனால் கடவுளோ அவரை உயிர்த்தெழவைத்து, அவரை வாழ்வு மற்றும் சாவின் ஆண்டவராக்கினார். இயேசுவில், அனபு பகைமையையும், கருணையானது பாவநிலையையும், நன்மை தீமையையும், உண்மை பொய்மையையும், வாழ்வு மரணத்தையும் வெற்றிகண்டது. அதனால்தான் நாம் ஒவ்வொருவரிடமும் ‘வந்துபாருங்கள்’ என்று கூறுகிறோம்.

வலுவின்மையாலும், பாவம் மற்றும் மரணத்தாலும் குறியிடப்பட்டிருக்கும் வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் நற்செய்தி என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, மாறாக, முன்நிபந்தனையற்ற, அதேவேளை விசுவாச நிறைவான அன்பிற்கான சாட்சியமாகும்.

நம்மைவிட்டு நாம் வெளிவந்து மற்றவர்களை நோக்கிச் சென்று சந்திப்பதையும், வாழ்வின் பிரச்சனைகளால் நசுக்கப்பட்டோருடன் நெருக்கமாயிருப்பதையும், தேவையிலிருப்போருடன் பகிர்ந்துகொள்வதையும், நோயாளிகள், முதியோர் மற்றும் ஒதுக்கப்பட்டோரின் சார்பாக எழுந்து நிற்பதையும் பற்றியது இந்த ‘வந்து பாருங்கள்’ என்பது. அன்பு, சக்தி நிறைந்தது, அனபு, வாழ்வை வழங்குகின்றது, பாலைநிலத்திலும் நம்பிக்கையை மலரவைக்கிறது என்பதை ‘வந்து பாருங்கள்’.

இந்த மகிழ்வுநிறை உறுதியை இதயங்களில் தாங்கி நாங்கள், உயிர்த்த ஆண்டவரே! உம்மை நோக்கித் திரும்புகிறோம். நாங்கள் அனாதைகள் அல்ல, எங்களுக்கும் தந்தையுண்டு என்பதை உணர்ந்து உம்மை அன்புகூர்ந்து ஆராதனை செய்யும் நோக்கில் உம்மைத் தேடிக் கண்டுகொள்ள எங்களுக்கு உதவியருளும்.

பலவேளைகளில் எங்களின் காரணமாக விளையும் பசிக்கொடுமையை, அதாவது, பொருட்களை வீணடித்தலாலும், மற்றும் மோதல்களாலும் விளையும் பசிக்கொடுமையை வெற்றிகொள்ள எமக்கு உதவியருளும்.
சுரண்டலுக்கும் கைவிடலுக்கும் பலவேளைகளில் உள்ளாகும் பலவீனமான மக்களை, குறிப்பாக, குழந்தைகளையும், பெண்களையும், முதியோரையும் பாதுகாக்க எமக்கு சக்தியைத் தாரும்.

‘எபோலா’ உயிர்கொல்லி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கினி குடியரசு, சியேரா லியோன் மற்றும் லைபீரியா நாடுகளின் எம் சகோதர சகோதரிகள் மீதும், கவனிப்பாரின்றி கைவிடப்படுவதாலும், கொடிய ஏழ்மை நிலைகளாலும் வேறு பல நோய்களாலும் துன்புறும் மக்கள் மீதும் அக்கறைகாட்ட எமக்குத் தூண்டுதலை வழங்கியருளும். உலகின் பல்வேறு பகுதிகளில் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் குருக்கள், பொதுநிலையினர் என எண்ணற்ற மக்களைப்போல், தங்கள் உறவினர்களிடமிருந்தும் அன்பானவர்களிடமிருந்தும் அநீதியான முறையில் பிரிக்கப்பட்டு இந்த உயிர்ப்புப் பெருவிழாவை சிறப்பிக்க முடியாமல் இருக்கும் அனைத்து மக்களுக்கும், இறைவா நீரே ஆறுதலை வழங்கியருளும்.

மாண்புடனும், தங்கள் விசுவாச வாழ்வை சுதந்திரத்துடனும் மேற்கொள்வதற்கான நல்லதொரு வருங்காலத்தைத் தேடும் ஆவலுடன் தங்கள் சொந்த இடங்களைவிட்டு வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துள்ள மக்களுக்கு உம் ஆறுதலை வழங்கியருளும் ஆண்டவரே.

அனைத்துப் போர்கள் மற்றும் மோதல்களும், அவை சிறியனவாயினும் பெரியனவாயினும், அவை தொன்மையானதாயினும், அண்மைக்காலத்தைச் சேர்ந்ததாயினும், அவற்றிற்கு ஒரு முடிவைக் கொணர்ந்தருளும் என ஆண்டவராம் இயேசுவே! உம்மை நோக்கி வேண்டுகிறோம்.
சிரியா நாட்டிற்காக சிறப்பான விதத்தில் செபிக்கிறோம் இறைவா.

அந்நாட்டின் மோதல்களால் துன்பங்களை அனுபவிக்கும் மக்கள், தேவையான மனிதாபிமான உதவிகளைப் பெறவும், போரிடும் தரப்புகள் மீண்டும் மரண ஆயுதங்களை கையில் எடுக்காமல் இருக்கவும், குறிப்பாக அப்பாவி மக்கள் மேல் அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கவும், அதற்குமாறாக, பலகாலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் நீடித்த அமைதிக்காக துணிச்சலுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும் உதவுமாறு உம்மிடம் வேண்டுகிறோம்.

ஈராக்கில் சகோதரத்துவ வன்முறைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஆறுதலை வழங்கியருளும். இஸ்ராயேலர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மீண்டும் துவக்கப்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகள் கொணர்ந்துள்ள நம்பிக்கைகளை தொடர்ந்து தக்கவைக்க உதவும்.

மத்திய ஆப்ரிக்க குடியரசில் இடம்பெறும் மோதல்கள் முடிவுக்கு வரவும், நைஜீரியாவின் சில பகுதிகளில் இடம்பெறும் கொடுமையான பயங்கரவாதத் தாக்குதல்களும், தென் சூடானில் இடம்பெறும் வன்முறை நிகழ்வுகளும் நிறுத்தப்படவும் உம்மிடம் இறைஞ்சி மன்றாடுகிறோம்.

வெனிசுவேலாவில் ஒப்புரவையும் சகோதரத்துவ உடன்பாட்டையும் நோக்கி இதயங்கள் திருப்பப்பட வேண்டுகிறோம்.

ஜூலியன் நாள்காட்டியை பின்பற்றும் கிறிஸ்தவச் சபைகளோடு இணைந்து இவ்வாண்டு நாங்கள் கொண்டாடும் உம் உயிர்ப்புப் பெருவிழாவின் வழியாக, ஆண்டவரே, நீர், உக்ரைனில் அமைதியைக் கொணர எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளை ஒளிர்வித்து, தூண்டுதலை வழங்கியருளும். அமைதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவரும், அனைத்துலகச் சமுதாயத்தின் ஆதரவோடு வன்முறைகளைக் களையவும், ஒருங்கிணைதல், மற்றும் பேச்சுவார்த்தைகளின் உணர்வோடு, நாட்டின் வருங்காலத்திற்கென புதியதொரு பாதையை வகுக்கவும் உதவியருளும்.

இறைவா! இவ்வுலகின் அனைத்து மக்களுக்காகவும் செபிக்கிறோம். மரணத்தை வென்ற நீர், வாழ்வை எமக்கு வழங்கியருளும், உம் அமைதியையும் எமக்குத்தாரும்.
இவ்வாறு தன் ‘ஊர்பி எத் ஓர்பி’ வாழ்த்துச்செய்தியை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் ‘ஊர்பி எத் ஓர்பி’ என்ற நகருக்கும் உலகுக்குமான ஆசீரையும் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *