கடவுளின் பிள்ளைகளாகவும், கிறிஸ்துவின் சகோதர சகோதரிகளாகவும் வாழாமல் இருப்பதே உண்மையான வறுமை

uu நம் போதகராகிய கிறிஸ்துவைப் பின்பற்றி, நம் சகோதர சகோதரிகள் எதிர்கொள்ளும் ஏழ்மையை உணர்ந்து அதை நம்முடையதாக்கி, அதை அகற்றுவதற்கு நடைமுறை நடவடிக்கைகளை எடுப்பதற்கு கிறிஸ்தவர்களாகிய நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற மார்ச் 5ம் தேதி தொடங்கும் தவக்காலத்துக்கென இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி, உலகில் மனிதர் எதிர்கொள்ளும் மூன்றுவிதமான வறுமை நிலைகளை விளக்கி அவற்றை அகற்றுவதில் கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் கடமையைச் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதரவற்றநிலை, வறுமை போன்றது அல்ல என்றும், ஆதரவற்றநிலை என்பது, விசுவாசமின்றி, ஆதரவின்றி, நம்பிக்கையின்றி இருக்கும் வறுமையே என்றும், பொருள் சார்ந்த, நன்னெறி சார்ந்த, ஆன்மீகம் சார்ந்த மூன்று வகையான கைவிடப்பட்ட ஆதரவற்ற நிலை உள்ளது என்றும் தனது தவக்காலச் செய்தியில் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

பொருள் சார்ந்த ஆதரவற்ற நிலையையே பொதுவாக வறுமை என்று சொல்கிறோம், இது மனித மாண்பு மறுக்கப்பட்டு, உணவு, நீர், நலவாழ்வு, வேலை, கலாச்சார முறையில் வளர்தல் ஆகிய அடிப்படை உரிமைகளும் தேவைகளும் இல்லாமல் வாழ்தல் ஆகும், இவ்வாறு வாழ்வோருக்குத் திருஅவை உதவுகின்றது என்றுரைத்துள்ள திருத்தந்தை, அதிகாரமும் ஆடம்பரமும் பணமும் தெய்வச்சிலைகளாக மாறும்போது நியாயமாகப் பங்கிடப்பட வேண்டியதன் தேவைக்கான முன்னுரிமையை செல்வம் மேற்கொண்டு விடுகின்றது, எனவே நீதி, சமத்துவம், எளிமை, பகிர்வு ஆகிவற்றுக்கு நம் மனசாட்சிகள் மாற வேணடுமெனவும் கூறியுள்ளார்.

தீய ஒழுக்கங்கள் மற்றும் பாவத்துக்கு அடிமையாவதை நன்னெறி சார்ந்த ஆதரவற்றநிலை என்று கூறியுள்ள திருத்தந்தை, மது, போதைப்பொருள், சூதாட்டம், இழிபொருள் இலக்கியங்கள் போன்றவற்றுக்கு அடிமையாகியுள்ளவர்கள் குறித்த கவலையையும், இவை ஏற்படுத்தும் கடும் விளைவுகளையும் வெளிப்படுத்தி கடவுள் மட்டுமே நம்மை மீட்டு விடுவிக்க வல்லவர் என்று கூறியுள்ளார்.

பொருளிலும், நன்னெறியிலும், ஆன்மீகத்திலும் வறுமையாய் வாழ்வோர்க்கு, கிறிஸ்துவில் நம் ஒவ்வொருவரையும் அணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கும் நம் தந்தையாம் கடவுளின் கருணைநிறை அன்பின் நற்செய்திக்குத் திருஅவை சாட்சி வழங்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளின் பிள்ளைகளாகவும், கிறிஸ்துவின் சகோதர சகோதரிகளாகவும் வாழாமல் இருப்பதே உண்மையான வறுமை என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஆன்மீகம் சார்ந்த ஏழ்மையை அகற்றுவதற்கு நற்செய்தியே உண்மையான மாற்று மருந்து என்றும் கூறியுள்ளார்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு அவர் உங்களுக்காக ஏழையானார்(cf.2கொரி.8:9) என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தவக்காலத்துக்கான செய்தி அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *