இயேசு காணிக்கையாக்கப்பட்டது இளையோரையும் முதியோரையும் இணைக்கின்றது

hhஇயேசு காணிக்கையாக்கப்பட்ட விழாவான இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் பல்லாயிரக்கணக்கான துறவிகளுக்கு திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழா, சந்திப்பின் விழா எனவும் அழைக்கப்படுகிறது, இச்சந்திப்பு இயேசுவுக்கும் மக்களுக்கும் இடையே இடம்பெறும் சந்திப்பு என்று கூறினார்.

இயேசுவுக்கும் மக்களுக்கும் இடையேயான சந்திப்பு, மரியாவும் யோசேப்பும் குழந்தை இயேசுவை எருசலேம் ஆலயத்துக்குக் கொண்டு சென்றபோது, முதியவர்கள் சிமியோனும் அன்னாவும் இயேசுவைச் சந்தித்ததைக் குறித்து நிற்கின்றது என்றும், இது இளையோருக்கும் முதியோருக்கும் இடையேயான சந்திப்பு என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது, ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் மகிழ்ச்சியடையும் இளையோரையும், தூய ஆவியின் செயலால் மகிழ்வின் நிறைவை அடையும் முதியோரையும் இணைக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

இச்சந்திப்பு, வார்த்தைப்பாடு எடுத்த துறவிகளின் நிறுவனங்களில் இடம்பெறுகின்றது என்றும், ஒரு துறவு நிறுவனத்தின் அடிப்படை தனிவரத்தின்மூலம் திருஅவையில் இயேசு நம்மைச் சந்திக்க வருகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

நம் அழைப்புகள் குறித்துச் சிந்திப்பது அழகானது என்று அத்திருப்பலியில் பங்குகொண்ட பல்லாயிரக்கணக்கான துறவிகளிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், துறவு வாழ்விலும் இளையோருக்கும் முதியோருக்கும் இடையே, திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்கும், இறைவாக்குரைப்பதற்கும் இடையே சந்திப்பு நடக்கின்றது என்று கூறினார்.

இயேசு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது, திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்கும், இறைவாக்குரைப்பதற்கும் இடையே இடம்பெறும் தனிச் சந்திப்பு என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், மரியாவும் யோசேப்பும், ஆண்டவரின் திருச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளவைகளை நிறைவேற்றுவதற்கு விரும்பினர் என லூக்கா நற்செய்திப் பகுதியில் நான்கு தடவைகள் உள்ளன எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *