இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டில் மேற்கொள்ளப்படக்கூடிய விசாரணைகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால், பிரச்சனையில் சம்பந்தமில்லாத வெளித்தரப்பினரால், மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று யாழ்ப்பாண ஆயர் தாமஸ் செளந்தரநாயகம் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளியுறவுச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலிடம் யாழ்ப்பாண ஆயர் தாமஸ் செளந்தரநாயகம் அவர்கள் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள நிஷா தேசாய் பிஸ்வால் யாழ்ப்பாண ஆயர் செளந்தரநாயகம் அவர்களை, ஆயர் இல்லத்தில் சந்தித்தபோது, மனித உரிமை மீறல் விடயத்தில் உள்நாட்டில் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரே அல்லது இராணுவத்தினருடன் சம்பந்தப்பட்டவர்களே விசாரணைகளை மேற்கொள்வதால் மக்களுக்கு அந்த விசாரணைகளில் நம்பிக்கை ஏற்படுவது கடினம் என ஆயர் சுட்டிக்காட்டினார்.