இளையோர், இயேசுவோடு இணைந்து பயணம் மேற்கொள்வதுடன், தங்கள் உடன் வாழ் இளையோருக்கும் நற்செய்தியை எடுத்துரைப்பவர்களாக இருக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் சர்தேனியா தீவிலுள்ள கலியாரி நகருக்கு இஞ்ஞாயிறன்று ஒருநாள் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, அங்கு Carlo Felice வளாகத்தில் இளைஞர்களைச் சந்தித்தபோது, நம்பிக்கையின் மனிதர்களாகச் செயல்படும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
வாழ்வில் தோல்வி, சோர்வு என்பவையெல்லாம், நமக்கு வைக்கப்படும் சோதனை மட்டுமல்ல, அவை முக்கியமானவையும் கூட எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவ்ர்கள், இளையோர் ஒவ்வோரும் தங்கள் வாழ்வு மற்றும் மகிழ்வு மூலம் இயேசுவின் நற்செய்தியை எடுத்துரைக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
கலியாரி திருத்தலத்தில் சிறைக்கைதிகள் மற்றும் வறியோர் அடங்கிய குழுவைச் சந்தித்த திருத்தந்தை, நம்பிக்கையின் அவசியத்தை மையமாக வைத்து தன் உரையை வழங்கினார்.
திருஅவையின் அங்கமாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் பிறரன்பின்வழி நம்பிக்கை எனும் விதைகளை விதைக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார் அவர்.
ஒவ்வொருவரும் திருஅவையை தங்கள் சொந்த வீடாக உணரவேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ், எழைகளுக்கு உதவிகளை வழங்கும்போது அங்கு சுய இலாபம் என்பது நோக்கமாக இருக்கக்கூடாது, மாறாக, தாழ்ச்சி என்பது முதலிடம் வகிக்கவேண்டும் என்றார்.
தேவையற்றவைகளாக முதியோரையும் இளையோரையும் தூக்கியெறியும் கலாச்சாரத்தைக் கைவிடுவிவோம் என்ற அழைப்பையும் இந்த மேய்ப்புப்பணி திருப்பயணத்தின்போது முன்வைத்த திருத்தந்தை, பணமே எல்லாம் என கருதி அதற்குக் கடவுளுக்குரிய இடத்தைக் கொடுப்பதே இந்த தூக்கியெறியும் கலாச்சாரத்திற்கு காரணமாக இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.