தனிமனிதர்மீது முதலில் கவனம் செலுத்தினால் மட்டுமே, மனிதரின் ஆன்மீகம் உட்பட அவரின் ஒவ்வொரு கூறும் கவனத்தில் எடுக்கப்படும் மனித வளர்ச்சி முழுமைபெற்றால் மட்டுமே நல்லதோர் உலகு அமையும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏழைகள், நோயாளிகள், கைதிகள், தேவையில் இருப்போர், அந்நியர் ஆகியோர் உட்பட யாரும் ஒதுக்கப்படாமல் இருந்தால் மட்டுமே, எதையும் தூக்கியெறியும் கலாச்சாரத்தைப் பின்னுக்குத் தள்ளி, சந்திக்கும் அனைவரையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நல்லதோர் உலகு அமையும் என்று மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2014ம் ஆண்டு சனவரி 19ம் தேதி கத்தோலிக்கத் திருஅவை சிறப்பிக்கும் அனைத்துலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், நல்லதோர் உலகு அமைவதற்கு ஒவ்வொரு மனிதரும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
நல்லதோர் உலகின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதேவேளை, இழுக்கு ஏற்படுத்தும் வறுமையின் பல்வேறு வடிவங்கள் குறித்து நாம் மௌனமாய் இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், குடியேற்றதாரர் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் களைவதற்கு அனைத்துலக அளவில் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோரைக் கருத்தில்கொண்டு நல்லதோர் உலகை அமைக்கும் முயற்சியில், குடியேற்றதாரர் குறித்த முற்சார்பு எண்ணங்கள் களையப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
மக்களின் குடியேற்றம் நற்செய்தி அறிவிப்புப்பணியைப் புதிய முறைகளில் செய்வதற்கு வாய்ப்புக்களை வழங்க முடியும் என்றும் தனது செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், தங்களது எதிர்காலம் இன்னும் அதிகமான பாதுகாப்பை வழங்கும் என்பதில் நம்பிக்கை இழக்க வேண்டாமென, குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோரைக் கேட்டுள்ளார்.
2014ம் ஆண்டு சனவரி 19ம் தேதி கத்தோலிக்கத் திருஅவை சிறப்பிக்கும் அனைத்துலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் நாள் நூறாவது அனைத்துலக தினமாகும்.
திருக்காட்சி விழாவுக்கு அடுத்துவரும் 2வது ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பிக்கப்படும் இவ்வுலக நாளை 1914ம் ஆண்டில் திருத்தந்தை 10ம் பத்திநாதர் உருவாக்கினார்.
‘குடியேற்றதாரரும் புலம்பெயர்ந்தோரும் : நல்லதோர் உலகை நோக்கி..’ என்ற தலைப்பில் நூறாவது அனைத்துலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினம் சிறப்பிக்கப்படவுள்ளது.