உலகெங்கும் அமைதி நிலவ, குறிப்பாக, மோதல்கள் நிறைந்துள்ள சிரியாவில் அமைதி திரும்ப உலக மக்கள் அனைவரும் செபிக்குமாறு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை உரையில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வழக்கமாக அந்தந்த ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து நண்பகல் மூவேளை உரை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், இஞ்ஞாயிறு மூவேளை உரை முழுவதும் உலகின் அமைதிக்காகக் குரல் கொடுத்தார்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் சிரியாவில் அமைதி திரும்ப அனைவரும் செபிக்குமாறு வலியுறுத்திய திருத்தந்தை, எனது இதயத்தின் ஆழத்திலிருந்து மிகவும் உறுதியுடன் அமைதிக்காக அழைப்புவிடுக்கிறேன் என்று கூறினார்.
இன்றைய உலகில் இடம்பெறும் பல சண்டைகள், எனது துன்பத்துக்கும் கவலைக்கும் பெருமளவில் காரணமாகின்றன, இந்நாள்களில் சிரியாவில் இடம்பெறுவது எனது இதயத்தை ஆழமாகக் காயப்படுத்தியுள்ளது, அங்கிருந்து வெளிவரும் வேதனைதரும் செய்திகள் எனது இதயத்தை அதிகமாக வேதனைப்படுத்துகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எனவே சகோதர சகோதரிகளே, அமைதிக்காகச் செபிப்பதற்கு அகிலத் திருஅவையையும் விண்ணப்பிக்கத் தீர்மானித்தேன் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், சிரியாவிலும், மத்திய கிழக்கிலும், உலகெங்கும் அமைதி நிலவுவதற்காக அர்ப்பணிக்கும் செபம் மற்றும் நோன்பு நாளாக அந்த நாள் முழுவதும் செலவழிக்கப்படுமாறு கேட்கிறேன் என்றும் கூறினார்.
அந்தச் செப மற்றும் நோன்பு நாள், அமைதியின் அரசியாம் அன்னைமரியா பிறந்த விழாவுக்குத் திருவிழிப்பு நாளான செப்டம்பர் 7ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும் என்றும், அந்நாளன்று இரவு 7 மணியிலிருந்து நள்ளிரவுவரை வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் செபம் நடைபெறும் என்றும், மற்ற தலத்திருஅவைகளும் இதே நாளில் செப மற்றும் நோன்பைக் கடைப்பிடித்து இதே கருத்துக்காகச் செபிக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிற கிறிஸ்தவ சபைகளும், அனைத்து மதத்தவரும், மதநம்பிக்கையற்றவரும், நன்மனம்கொண்ட அனைவரும், எம்முறையில் பங்குகொள்ள இயலுமோ அம்முறையில் பங்குகொள்ளுமாறு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், மனித சமுதாயம் அமைதியின் இவ்வடையாளங்களைப் பார்க்கவும், நம்பிக்கை மற்றும் அமைதியின் வார்த்தைகளைக் கேட்கவும் வேண்டுமென்றும் கூறினார்.
ஒன்றிணைந்த வாழ்வு, நீதி, அன்பு ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதற்கான பணியை அனைவரும் கொண்டுள்ளனர், அமைதிக்கானத் தொடர் அர்ப்பணம் நன்மனம்கொண்ட அனைவரையும் ஒன்றிணைக்கின்றது என்றும், அமைதி எல்லாருக்கும் உரியது என்பதால் இது எல்லாத் தடைகளிலிருந்தும் மீளவேண்டும், அமைதி நன்மையானது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏற்கனவே இரத்தம் சிந்தப்பட்டுள்ள சிரியாவில் அண்மையில் இடம்பெற்ற ஆயுதத் தாக்குதல்கள் ஆயுதம் ஏந்தாத அப்பாவி மக்கள்மீதும், சிறார்மீதும் ஏற்படுத்தியுள்ள எதிர்மறை விளைவுகள் குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், சிரியாவில் அமைதி நிலவ அனைத்துலக சமுதாயம் காலதாமதமின்றி அமைதிக்கானத் தெளிவானப் பரிந்துரைகளை முன்வைத்து அவற்றை ஊக்குவிப்பதற்கு எல்லா வகையிலும் முயற்சிகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
மனிதாபிமானப் பணிகள் தடையின்றிச் செயல்பட உதவிகள் செய்யப்படுமாறும், சண்டைக் கலாச்சாரமோ முரண்பாட்டுக் கலாச்சாரமோ மக்களுக்கிடையே, மக்களுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது, மாறாக, உரையாடல் கலாச்சாரமே அமைதிக்கான ஒரேவழி என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், வன்முறை, போர், மோதல் ஆகியவற்றை உரையாடல், ஒப்புரவு, அன்பு ஆகிய சக்திகளால் வெல்வதற்கு அமைதியின் அரசியாம் அன்னைமரியிடம் செபிப்போம் என்று கூறினார்.
கடந்த சில ஞாயிறுகளில் செய்ததுபோல இஞ்ஞாயிறன்றும் தன்னோடு சேர்ந்து அனைத்து மக்களும் அமைதிக்கானச் செபத்தைச் சொல்லுமாறு கூறிச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.