வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோயை மாற்றக்கூடிய ஒரு புரோட்டினை அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நியூயார்க்கின் கொலம்பிய பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, இந்தப் புதிய கண்டுபிடிப்பினால் மறதி நோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படலாம் என்று தெரிகிறது.
RbAp48 என்ற இந்தக் குறிப்பிட்ட புரோட்டினை உட்கொண்ட வயதான எலிகள், இளம் வயதில் இருக்கும் எலிகளைப் போல நினைவு சக்தியைப் பயன்படுத்திச் செய்யும் வேலைகளைச் செய்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
வயதான காலத்தில் ஏற்படும் ஞாபக மறதியானது அல்சைமர் நோயுடன் தொடர்பில்லாத தனி நிலை என்பதற்கான ஆதாரங்களையும் அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
மேலும், மனித மூளையின் அமைப்பையும், அதன் செயல்பாட்டையும் அறிந்து கொள்வது இன்றுவரை சவாலாக இருந்தநிலை மாறி, தற்போது சிறிய அளவிலான மனித மூளையை, ஸ்டெம் செல் மூலம் ஆய்வகத்தில் உருவாக்கி அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி முழுவெற்றி அடையும் பட்சத்தில், நரம்புக் கோளாறுகளை எளிதில் சரி செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
மூளையை ஆய்வகத்தில் உருவாக்கும் நோக்கில், அதற்கான வேலையை ஆஸ்திரிய நாட்டு அறிவியலாளர்கள் துவக்கினர்.
இந்த ஆராய்ச்சியில் சிறிய அளவிலான மூளை வளர்ச்சி சிறப்பாக இருந்தது. முதல் 15-20 நாட்களில் “செரிபரல் ஆர்கனாஸ்டு’ பகுதி வளர்ச்சி நன்றாக இருந்தது. அதனைச்சுற்றி “செரிபரல் வென்ட்ரிகல்’ திசு வளர்ச்சியும் சிறப்பாக இருந்தது. 20-30 நாட்களில் செரிபரல் கார்டெக்ஸ், ரெட்டினா, மெனின்க்ஸ், குரோய்டு பிளக்சிஸ் ஆகியவையும் வளர்ந்திருந்தன. இரண்டு மாதங்களில் மூளையின் வளர்ச்சி ஓரளவு முழுமையடையும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இதன் செயல்பாட்டை 10-12 மாதங்கள் கண்காணித்த பிறகு தான் ஆராய்ச்சி முடிவுகள் தெரிய வரும்.