சென்னை லொயோலா கல்லூரி வளாகத்தில் “என் மத நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளாத அயலவரும் நானும்” என்ற தலைப்பில் பல் சமய உரையாடல் கருத்தரங்கு ஒன்று ஆகஸ்ட் 28, இப்புதனன்று நடைபெற்றது.
லொயோலா கல்லூரியில் இயங்கிவரும் பண்பாட்டு, பல்சமய உரையாடல் மையம் (IDCR) ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் இந்த மையத்தின் இயக்குனரும், தலைசிறந்த இறையியல் அறிஞருமான இயேசு சபை அருள்பணியாளர் மைக்கிள் அமலதாஸ் அவர்கள் கத்தோலிக்க கண்ணோட்டத்தில் உரையாடலின் தேவைகள் குறித்து உரையாற்றினார்.
சென்னையில் புகழ்பெற்று விளங்கும் குருக்குல் லூத்தரன் இறையியல் கல்லூரியின் சமயத்துறை தலைவர் பேராசிரியர் இஸ்ரயேல் செல்வநாயகம் அவர்களும், தென்னிந்திய கிறிஸ்தவ சபை மாமன்றத்தின் செயலர் விஜி வர்கீஸ் ஈப்பன் அவர்களும் இக்கருத்தரங்கில் முக்கிய உரைகளை வழங்கினர்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் பொன்விழா ஆண்டு நடைபெறும் வேளையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பொதுச்சங்கமும் கிறிஸ்தவ சபைகளின் உலக அவையும் சொல்லித்தரும் உரையாடல் வழிகள், அவற்றில் நாம் சந்திக்கும் சவால்கள் போன்ற கருத்துக்கள் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.
வெவ்வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள் மேற்கொள்ளும் கலப்புத் திருமணங்களால் குடும்பத்தினரும், குழந்தைகளும் சந்திக்கும் சவால்கள் குறித்தும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் மனப்பக்குவத்தையும், மொழி பயன்பாட்டையும் இளையோர் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற தேவை குறித்தும் இக்கருத்தரங்கில் பேசப்பட்டது.
பண்பாட்டு, பல்சமய உரையாடல் மையத்தின் செயல்பாட்டு இயக்குனர் இயேசு சபை அருள் பணியாளர் வின்சென்ட் சேகர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஒரு நாள் கருத்தரங்கில், கத்தோலிக்க அருள் பணியாளர்கள், துறவியர், பொது நிலையினர், மற்றும் கிறிஸ்தவ பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.