இந்தியாவில் அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற அரசு, ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, மார்ச் 18, முதல், மார்ச் 25, வரை, இந்தியக் கிறிஸ்தவர்கள் செப வாரத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்,.
தேர்தலில் மக்களாட்சி வெல்லவும், பணம் விநியோகிக்கப்படுவது தவிர்க்கப்படவும் நாட்டின் பொதுநலனில் அக்கறையுள்ள தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படவும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படவும், இச்செப வாரத்தில் உண்ணா நோன்பிருந்து செபிக்குமாறு, கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் இடம்பெறுவதாக, இம்மாதத்தில், பீதேஸ் செய்தி கூறியுள்ளது. Tangaguda கிராமத்தில், 35 இந்துக் குடும்பங்களுக்கு அருகில் வாழ்கின்ற, மூன்று கிறிஸ்தவக் குடும்பங்கள், கடுமையாய்த் தாக்கப்பட்டனர் என்று, மார்ச் 3ம் தேதியன்று, பீதேஸ், செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
மேலும், இந்தியாவில், இந்து தேசியவாதப் போக்கும், சகிப்பற்றதன்மைச் சூழலும் அதிகரித்து வரும்வேளை, இந்திய ஊடகவியலாளர்கள், பதியமுறையில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்று, ஓர் ஊடக உரிமைக் குழு கூறியுள்ளது.
இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும், மூன்று செய்தியாளர்கள் வீதம் கொல்லப்படுகின்றனர் எனவும், பத்திரிகை சுதந்திரத்தைப் பொருத்தவரை, 180 நாடுகளில் இந்தியா 136வது நாடாக உள்ளது எனவும், பத்திரிகை சுதந்திரக் குறியீடு, மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில், கடந்த 24 ஆண்டுகளில், 70க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.