திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 15, இத்திங்கள் காலை 7.50 மணிக்கு, சிலே மற்றும் பெரு நாடுகளுக்கு, தனது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தைத் தொடங்கினார். வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தைவிட்டுப் புறப்படுவதற்கு முன்னர், அந்த இல்லத்தில், ஒரு குடும்பத்தினரைச் சந்தித்தார்.
இக்குடும்பத்தினர், அண்மையில் உரோம் நகரில் சாலை விபத்தில் தன் இளவயது மகளைப் பறிகொடுத்தவர்கள். இவர்களுக்கு ஆறுதலும் ஆசீரும் அளித்து, உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமானம் நிலையத்திற்கு காரில் சென்று, சிலே நாட்டுத் தலைநகர் சந்தியாகோ நகருக்கு ஆல் இத்தாலியா விமானத்தில் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குப்பின், தன்னோடு விமானப் பயணம் செய்த பன்னாட்டு செய்தியாளர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும் சொன்னார் திருத்தந்தை.
பின்னர், செய்தியாளர்களிடம் இவ்வாறு பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். இப்பயணம் மிக அதிக நேரம் கொண்டதாய், 15 மணி, நாற்பது அல்லது இருபது நிமிடங்கள் எடுக்கும் என்று, ஆல்இத்தாலியா நிறுவனத்தினர் கூறினர். அதனால் உங்களுக்கு ஓய்வெடுக்கவும், வேலைசெய்யவும் தாராளமாக நேரம் இருக்கின்றது. இத்திருத்தூதுப் பயணத்தில் ஒவ்வொரு நாட்டிலும் மூன்று நாள்கள் இருப்பேன். சிலே நாட்டில் ஓராண்டு படித்திருக்கிறேன். இந்நாட்டை நன்கு அறிவேன். இங்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். ஆனால் பெரு நாட்டை மிகச் சிறிதளவே அறிவேன். கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக இரண்டு அல்லது, மூன்று முறை சென்றிருக்கிறேன்.
மேலும், நெஞ்சை உருக்கும் ஓர் அர்த்தமுள்ள சிறிய படத்தை உங்கள் எல்லாரிடமும் கொடுக்கச் சொன்னேன். இந்தப் படத்திலுள்ள ஜப்பானின் நாசகாசி சிறுவன் ஒருவன், 1945ம் ஆண்டு நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டால் இறந்துபோன தன் தம்பியை முதுகில் சுமந்தபடி, எரிப்பதற்காக வரிசையில் காத்து நிற்கிறான். இந்தப் படத்தைப் பார்த்து நான் மிகவும் கலங்கினேன்.
இந்த உலகம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நோக்கி மீண்டும் சென்று கொண்டிருக்கின்றது என்ற அச்சம் எனக்கு ஏற்படுவதால், இந்தப் படத்தை மற்றவர்களுக்கும் கொடுக்க விரும்பினேன். அணு ஆயுதங்கள் போரிடும் தரப்புகளை மட்டுமல்லாமல், முழு மனித சமுதாயத்தையுமே பாதிக்கும்.
இவ்வாறு, இந்தப் படத்தைக் காட்டி செய்தியாளர்களிடம் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அணு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்படுவதற்கு எதிரான தனது கண்டனத்தையும் தெரிவித்தார். அணு ஆயுதங்களின் அச்சுறுத்தல் பற்றி, திருத்தந்தை ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டு, அதற்கு எதிரான தன் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று நாள்களுக்கு முன்னர், ஹவாய் தீவில், ஏவுகணை தாக்குதல் விரைவில் இடம்பெறும் என்ற செய்திகள் பரவியதால், அந்நாட்டு மக்கள் மிகவும் அச்சம் கொண்டனர்.
இந்தத் தவறான எச்சரிக்கையை விடுத்த ஹவாய் அவசரகால நிர்வாகத்துறை, அதை அறிவித்த 38 நிமிடங்களுக்குப்பின் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பேசி, தான் அறிவித்ததைத் திரும்பப் பெற்றது. நாகசாகி சிறுவன் பற்றி உள்ள கறுப்பும் வெள்ளையுமான அப்படத்தின் பின்பக்கத்தில், ‘போரின் கனிகள்’ என்று எழுதப்பட்டு, அதற்குக் கீழே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கையொப்பம் உள்ளது. 1945ம் ஆண்டு ஆகஸ்டில், அமெரிக்க ஐக்கிய நாடு நாகசாகி நகரில் அணுகுண்டு வீசி தாக்கிய, சில நாள்கள் சென்று, அமெரிக்க கப்பற்படை புகைப்படக்காரர் Joe O’Donnell என்பவர் எடுத்த படம் இது.