இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள ஒரு கத்தோலிக்கப் பெண்கள் பள்ளியில் கொண்டாடப்பட்ட மரியன்னை விழாவில், மலர் அலங்காரங்களுக்குப் பதிலாக, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யும் வகையில் இவ்விழா கொண்டாடப்பட்டது என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.
கொழும்பு நகரின், பம்பலபிட்டியவில் உள்ள திருக்குடும்ப பெண்கள் பள்ளியில், மே மாத இறுதியில், மரியன்னையின் வணக்க மாத நிறைவு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வாண்டு, ஏற்பட்ட மழை, வெள்ளம், காரணமாக, இவ்விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
மரியன்னைக்கு மலர் அலங்காரங்கள் செய்வதற்குப் பதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்க இப்பள்ளி நிர்வாகிகள் எடுத்த முடிவை, மாணவிகள் பெரிதும் வரவேற்றத்தால், திருவிழா நாளன்று மாணவியர் கொணர்ந்த உணவு, உடை ஆகியவை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 170 பேருக்கு வழங்கப்பட்டது என்று, பள்ளி முதல்வர் அருள் சகோதரி தீபா பெர்னாண்டோ அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.