போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா என்ற ஊரிலிருந்து ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திலுள்ள கோவா த இரியா என்ற இடத்தில், 1917ம் ஆண்டு மே 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, லூசியா, பிரான்சிஸ்கோ, ஜசிந்தா ஆகிய மூன்று சிறாரும், ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில், அன்னை மரியா அச்சிறாருக்கு முதல் முறையாக காட்சியளித்தார். இக்காட்சி நடைபெற்ற நூற்றாண்டு பெருவிழா 2017ம் ஆண்டு மே 13, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டது.
இப்பெருவிழாவுக்காக, இவ்வெள்ளி மாலையில் பாத்திமா சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காட்சிகள் சிற்றாலயத்தில் செபித்து, அன்னையின் திருவுருவப் பொற்பாதத்தில், இலைகளுடன் மூன்று பொன்ரோஜாக்கள் நிறைந்த மலர்க் கொத்து ஒன்றைச் சமர்ப்பித்து, கார்மேல் நம் அன்னை தியான இல்லம் சென்றார். அவ்வில்லத்தில் இச்சனிக்கிழமை காலையில், போர்த்துக்கல் நாட்டின் பிரதமர் அந்தோனியோ லூயிஸ் சாந்தோஸ் த கோஸ்தா அவர்களைச் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை.
மேலும், நான்கு தலைமுறைகளாக, ஈராக், லிபியா, இத்தாலி எனப் புலம்பெயர்ந்து, தற்போது பாத்திமாவில் வாழும் Amina என்ற பாலஸ்தீனக் குடும்பத்தினரையும், அந்த இல்லத்தில் சந்தித்தார் திருத்தந்தை. அந்த தியான இல்லத்திற்கு, வெள்ளியாலான, இயேசுவின் இறுதி இரவுணவு படம் ஒன்றைப் பரிசாக அளித்தார். பின்னர் அங்கிருந்து இருநூறு மீட்டர் தூரத்திலுள்ள செபமாலை அன்னை பசிலிக்கா சென்றார் திருத்தந்தை. அன்னை மரியாவை காட்சியில் கண்ட அந்த மூன்று இடையர் சிறாரும், 1917ம் ஆண்டு மே 13ம் தேதியன்று விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென அந்த ஒளியைப் பார்த்த இடத்தில்தான் இந்த பசிலிக்கா கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள அருளாளர்கள் பிரான்செஸ்கோ மார்த்தோ, ஜசிந்தா மார்த்தோ ஆகிய இருவரின் கல்லறைகளில் செபித்தார் திருத்தந்தை.
பின்னர், அப்பசிலிக்காவுக்கு முன்னுள்ள பிரம்மாண்டமான வளாகத்தில் காலை உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு, பாத்திமா அன்னை விழாத் திருப்பலியை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்பெருவிழாத் திருப்பலியில், அருளாளர்கள் பிரான்செஸ்கோ மார்த்தோ, ஜசிந்தா மார்த்தோ ஆகிய இருவரையும் புனிதர்கள் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சிறார், திருஅவை வரலாற்றில், புனிதர்களாக உயர்த்தப்பட்டிருப்பவர்களுள் இளமையானவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள். திருத்தந்தை, இவர்களைப் புனிதர்களாக அறிவிப்பதற்கு முன், பாத்திமா ஆயர் அந்தோனியோ மார்த்தோ அவர்கள், இச்சிறார் புனிதர்களின் வாழ்க்கை வரலாறை, சுருக்கமாக வாசித்தார். வளாகத்தில் பெருவெள்ளமென கூடியிருந்த விசுவாசிகள் முன்னிலையில், பிரான்சிஸ்கோ. ஜசிந்தா ஆகிய இரு இடையர் சிறாரைப் புனிதராக அறிவித்த திருத்தந்தை, இத்திருப்பலியில் மறையுரை வழங்கினார்.
புனிதர்கள் பிரான்சிஸ்கோ. ஜசிந்தா, இன்னும் அருள்சகோதரி லூசியா சாந்தோஸ் ஆகிய மூவரும், அன்னை மரியாவை முதல் முறையாகக் காட்சியில் கண்டதன், இந்த நூறாம் ஆண்டு விழாத் திருப்பலியில், புனிதச் சிறார்கள் பிரான்சிஸ்கோ, ஜசிந்தா ஆகிய இருவரின் பரிந்துரையால் அற்புதமாய்க் குணமடைந்த பிரேசில் நாட்டு சிறுவன் லூக்கா, அவனின் குடும்பத்தினர், போர்த்துக்கல், பரகுவாய், Sao Tome மற்றும் Principe நாடுகளின் அரசுத்தலைவர்கள் உட்பட பல முக்கிய அரசு அதிகாரிகள் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர். இந்த அரசுத்தலைவர்கள், இத்திருப்பலியின் இறுதியில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பாத்திமா ஆயர் மார்த்தோ, இத்திருப்பலியின் இறுதியில் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார்.