அன்பு சகோதர, சகோதரிகளே, “பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்” (திருவெளிப்பாடு 12:1) என்று திருவெளிப்பாடு நூலில் வாசிக்கிறோம். அந்தப் பெண் ஒரு மகனை ஈன்றெடுக்கும் நிலையில் இருந்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நற்செய்தியில், இயேசு தன் சீடரிடம், “இவரே உம் தாய்” (யோவான் 19:27) என்று சொல்வதைக் கேட்கிறோம். நமக்கொரு தாய் இருக்கிறார். அவர், மிக அழகானப் பெண்மணி என்பதை, நூறு ஆண்டுகளுக்கு முன், பாத்திமாவில் காட்சி கண்டவர்கள் உணர்ந்தனர்.
நமது தாய், கடவுள் அற்ற வாழ்வைக் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இறைவனின் ஒளி நமக்குள் உறைந்து, நம்மைக் காக்கிறது என்பதை நமக்கு நினைவுறுத்த மரியா வந்தார். லூசியா எழுதியுள்ள நினைவுகளில், அவர்கள் மூவரும் ஒளியால் சூழப்பட்டனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு வந்துள்ள பல திருப்பயணிகளின் அனுபவமும், நம்பிக்கையும் இதுதான்: பாத்திமாவில், நம்மைப் பாதுகாக்கும் ஒளிப் போர்வையால் சூழப்படுகிறோம் என்பதே அந்த நம்பிக்கை.
அன்பு திருப்பயணிகளே, தன் குழந்தைகளை இறுகப்பற்றி அரவணைக்கும் ஒரு தாய் நமக்கு இருக்கிறார். இதையே, நாம் இன்றைய 2ம் வாசகத்தில் கேட்டோம்: அருள்பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்து கொண்டவர்கள் வாழ்வுபெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? (உரோமையர் 5:17)
இத்தகைய நம்பிக்கையில் இங்கு கூடிவந்துள்ளோம். கடந்த நூறு ஆண்டுகளாக நாம் பெற்றுக்கொண்ட எண்ணிலடங்கா வரங்களுக்காக நன்றி சொல்ல வந்துள்ளோம்.
கன்னி மரியா வழியே, இறைவனின் ஒளிக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட புனித பிரான்சிஸ்கோ, புனித ஜசிந்தா இருவரும், நமது எடுத்துக்காட்டுகளாக அமைகின்றனர். அவர்கள் அனுபவித்த துன்பங்களையும், எதிர்ப்புக்களையும் வெல்வதற்கு, இந்த ஒளி உதவியாக இருந்தது. நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையின் ஊற்றாக விளங்கும்படி இறைவன் நம்மைப் படைத்தார். கருவிலேயே இறந்து பிறந்த குழந்தையைப்போல நமது நம்பிக்கை இருக்கக்கூடாது!
தாராள மனம் கொண்டோர் வழியே வாழ்க்கை தொடர்ந்து செல்கிறது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் (யோவான் 12:24) என்பதை ஆண்டவர் சொன்னார்; அதன்படி வாழ்ந்தும் காட்டினார். அவர் எப்போதும் நமக்கு முன் சென்று, நம் அனுபவங்கள் அனைத்தையும் ஏற்கனவே அவர் ஏற்றுக்கொள்கிறார். நாம் வாழ்வில் சிலுவையை உணரும்போது, அங்கு இயேசு ஏற்கனவே சிலுவையில் அறையப்பட்டிருப்பதை நாம் உணர்கிறோம்.
மரியாவின் பாதுகாப்புடன், இவ்வுலகிற்கு விடியலை அறிவிப்பவர்களாக வாழ்வோம். இவ்விதம், நாம் இளமையான, அழகான திருஅவையின் முகத்தை மீண்டும் காண்போம்! பணியாற்றுவதில், வரவேற்பதில், அன்பு செலுத்துவதில், திருஅவை ஒளி வீசட்டும்!