அருளாளர் அன்னை தெரேசா உட்பட ஐந்து அருளாளர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நாளைக் குறிப்பது குறித்த கர்தினால்கள் அவை, இம்மாதம் 15ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
அருளாளர்கள் GIUSEPPE SÁNCHEZ DEL RÍO, STANISLAO DI GESÙ MARIA, GIUSEPPE GABRIELE DEL ROSARIO BROCHERO, MARIA ELISABETTA HESSELBLAD, கொல்கத்தா அன்னை தெரேசா ஆகிய ஐந்து அருளாளர்க்குப் புனிதர் பட்டம் வழங்கும் தேதி குறித்த விபரங்கள் இந்தக் கர்தினால்கள் அவையில் முடிவு செய்யப்படும்.
வத்திக்கான் அப்போஸ்தலிக்க மாளிகையிலுள்ள Consistory அறையில் மார்ச் 15, செவ்வாய் காலை 10 மணிக்கு, திருப்புகழ்மாலை செபத்துடன் இந்தக் கர்தினால்கள் அவையைத் தொடங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முன்னாள் யூகோஸ்லாவியா நாட்டில் ஸ்கோப்ஜி என்ற சிறு கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் நாள் பிறந்த அன்னை தெரேசா அவர்கள் 1929ல் இந்தியாவிற்கு வந்தார். தனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மற்றவர்களின் நலனுக்காகவே செலவிட்ட அன்னை, 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் நாள் மரணமடைந்தார்.
1962ல் பத்மஸ்ரீ விருது, பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயர்ந்த ரமோன் மகசேசே விருது, 1971ல் உலக அமைதிப் பரிசு, அமெரிக்காவின் `நல்ல சாமரியர்’ விருது, 1972ல் அனைத்துலக நேரு அமைதிப் பரிசு, 1976ல் சாந்தி நிகேதனில் முனைவர் பட்டம், 1979ல் நொபெல் அமைதி விருது, 1980ல் `பாரத இரத்னா’ விருது போன்றவை, அன்னை தெரேசா அவர்கள் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை.
இந்திய அரசு அவருடைய நினைவாய், தபால் தலையும் வெளியிட்டிருக்கிறது.