ஈராக்கில் அப்பாவி மக்கள் தற்போது எதிர்நோக்கிவரும் மனிதாபிமானப் பேரிடர் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கு அனைத்துலக சமுதாயம் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மீண்டும் மீண்டும் விண்ணப்பிப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
ஈராக்கின் மனிதாபிமானப் பேரிடர் நிலை குறித்து ஐ.நா. பொதுச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேரிடர் நிலையைக் களைவதற்குப் பொறுப்பான, ஐ.நா. நிறுவனத்தின் அனைத்துத் துறைகளும், குறிப்பாக, பாதுகாப்பு, அமைதி, மனிதாபிமானச் சட்டம், புலம்பெயரும் மக்களுக்கு உதவி ஆகிய துறைகள் ஐ.நா. அறிக்கையின்படி தங்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆற்றுமாறும் கேட்டுள்ளார்.
வட ஈராக் முழுவதும் இடம்பெற்றுவரும் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் உள்ள மக்களைப் பாதுகாத்து உதவுவதற்கு, நன்மனம் கொண்ட மக்கள் அனைவரின் மனசாட்சியை அத்தாக்குதல்கள் தட்டி எழுப்பாமல் இருக்க முடியாது என்றும் திருத்தந்தையின் கடிதம் கூறுகின்றது.
வட ஈராக்கில் கடந்த சில நாள்களாக இடம்பெற்றுவரும் வன்முறை நிகழ்வுகள் குறித்து தான் கவனித்து வருவதாகவும், இவ்வன்முறைகளால் கிறிஸ்தவர்களும் பிற சிறுபான்மை மதத்தவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர், அவர்களின் சமயப் பாரம்பரியங்களும் வழிபாட்டுத்தலங்களும் அழிக்கப்பட்டுள்ளன எனவும் தனது கடிதத்தில் கூறியுள்ள திருத்தந்தை, தனது பிரதிநிதியாக, நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் ஃபெர்னான்டோ ஃபிலோனி அவர்களை அங்கு அனுப்பியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.