மனித வாழ்வின் புனிதம், எவ்வித நடவடிக்கைகளாலும் குறைத்து மதிப்பிடப்படக் கூடாது

zz பொருளாதாரத்துக்கும் நன்னெறிக்கும் இடையே நிலவும் பிரிவினை, இந்நவீன உலகு எதிர்நோக்கும் கடும் சவால்களில் ஒன்றாக உள்ளவேளை, இதனால் மனித இயல்பின் அடிப்படை அறநெறிக்கூறுகள் அதிகமதிகமாய்ப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், இத்தாலிய வாழ்வு இயக்கத்தின் ஏறக்குறைய 470 பேரை இவ்வெள்ளியன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வாழ்வை, குறிப்பாக, கருவில் வளரும் குழந்தைகள், அப்பாவிகள் மற்றும் வலுவற்றவர்களின் வாழ்வை நேரடியாகத் தாக்கும் எந்த ஒரு செயலுக்கும் எதிராகக் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

தாயின் கருவறையிலிருந்து இயற்கையான மரணம் அடையும்வரை மனித வாழ்வு காக்கப்பட வேண்டும், கருச்சிதைவு, குழந்தைக்கொலை ஆகியவை கொடிய குற்றங்களாகும் என, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறியிருப்பதை நினைவுபடுத்துவோம் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

மனித வாழ்வு புனிதமானது மற்றும் மதிக்கப்பட வேண்டியது என்றும், மனிதர் வாழ்வதற்கான முதலும், அடிப்படையுமான உரிமையை ஏற்பதன் அடிப்படையில் ஒவ்வொரு குடியுரிமைச் சட்டமும் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த உரிமை பொருளாதார அல்லது கருத்தியல் அல்லது எவ்வித நிலையாலும் மீறப்படக் கூடாது என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இத்தாலிய வாழ்வு இயக்கத்தினரின் பணிகளை ஊக்குவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வியக்கத்தினருக்காகத் தான் செபிப்பதாகவும், தனக்காக அவர்கள் செபிக்குமாறும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், சமுதாயத்தின் நம்பிக்கையாகிய குழந்தைகளையும் முதியோரையும் காப்பாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *