கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தின் சிறப்பு மிக்க வரலாற்றைப் பேணிக் காக்கும் அதே வேளையில், இன்றைய உலகின் நிலையையும், நாளைய உலகின் சவால்களையும் ஒருங்கிணைப்பது அவசியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உரோம் நகரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் மிகப் பழமைவாய்ந்த பல்கலைக் கழகமான கிரகோரியன் பல்கலைக் கழகம், பாப்பிறை விவிலிய நிலையம், மற்றும் பாப்பிறை கீழை வழிபாட்டு முறை நிலையம் ஆகிய நிறுவனங்களிலிருந்து வந்திருந்த பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட, 4,000க்கும் அதிகமானோரை இவ்வியாழன் மதியம் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரலாற்றையும், வருங்காலத்தையும் இணைக்கும் எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
கலாச்சாரம், வரலாறு என்ற இரு கோணங்களிலும் புகழ்பெற்றுள்ள உரோம் நகரம், அங்கு அமைந்துள்ள கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பீடம் என்ற இரு கொடைகளைப் பெற்றுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் இந்த கிடைத்தற்கரிய வாய்ப்புக்களைச் சிறப்பான முறையில் பயன்படுத்தவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
அதேநேரம், உலகின் பல்வேறு கலாச்சாரங்களிலிருந்து உரோம் நகர் வந்து பணியாற்றும், பயிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் உரோம் நகரின் பல நிறுவனங்களுக்கு பெரும் கொடையாக அமைந்துள்ளனர் என்பதையும் திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
கல்விக்கும், ஆன்மீக வாழ்வுக்கும் இடையே உள்ள உறவைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையின் அடுத்த எண்ணமாகப் பகிர்ந்தார்.
நற்செய்தி, இறையியல் இவற்றைச் சரியான முறையில் கற்றுக்கொள்வதன் பயனாக, வாழ்வு, இவ்வுலகம், மனிதர்கள் என்ற அனைத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதைத் திருத்தந்தை வலியுறுத்தினார்.
இறைவனை மையப்படுத்தாமல், தன் அறிவை வளர்த்துக்கொள்ளும் இறையியலாளர், தன் அழகில் மயங்கிக் கிடந்த Narcissus போல வாழ்வது அருவருப்பூட்டுகிறது என்று கூறினார் திருத்தந்தை.
இறைவன் முன்னிலையில் முழந்தாளிட்டு, திறந்த மனதுடன் உண்மைகளை அறியும் பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
அறிவின் அரியணையான அன்னை மரியாவிடமும், புனித இஞ்ஞாசியாரிடமும் அனைவரின் பணிகளையும், கல்வியையும் ஒப்படைத்து, கூடியிருந்த அனைவருக்கும் தன் ஆசீரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.