இந்தியாவில் அடுத்ததாக அரசை அமைக்கவிருப்பவர் யார் என்ற கலக்கம் கிறிஸ்தவர்களுக்கு இருந்தாலும், குடியரசின் மீதும், வாக்காளர்களின் சக்தி மீதும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 7 கடந்த திங்கள் முதல் மேமாதம் 12 முடிய நடைபெறும் இந்தியத் தேர்தல்களின் ஒரு முக்கிய நாளான இவ்வியாழனன்று, ஒடிஸ்ஸா மாநில மக்கள் இந்தக் கடமையை நிறைவேற்றுகின்றனர் என்று எடுத்துரைத்த கட்டக்-புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக அமைதியை இழந்து தவிக்கும் ஒடிஸ்ஸா மாநில மக்கள், குறிப்பாக, கந்தமால் பகுதி மக்கள், புதிதாக அமையும் அரசின் வழியாக தங்கள் அமைதியைப் பெறவேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டார் பேராயர் ஜான் பார்வா.
இவ்வியாழனன்று தங்கள் வாக்குகளை அளித்துள்ள கந்தமால் மக்கள், இந்தத் தேர்தல் காலத்திலும், இனி தொடரும் நாட்களிலும் அமைதியாக வாழ்வதையே, நல்ல மனம் கொண்ட அனைவரும் விரும்புகின்றனர் என்று அகில உலக இந்தியக் கிறிஸ்தவக் கழகத்தின் தலைவர் சஜன் ஜார்ஜ் அவர்கள் கூறினார்.