டிசம்பர் 29, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூவேளை செப உரையை வழங்கியபின், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த குடும்பங்களையும், இத்தாலியின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த இளையோரையும் சிறப்பாக குறிப்பிட்டு, வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
விரைவில் கூடவிருக்கும் கர்தினால்கள் அவையும், அதைத் தொடர்ந்து நிகழவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றமும், குடும்பம் என்ற மையக்கருத்தில் விவாதங்களை மேற்கொள்ளவிருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திரு அவை மேற்கொள்ளும் இந்த முயற்சிகள் வெற்றிகரமாக அமைய ஒரு சிறு செபம் ஒன்றைக் கூறினார்.
திருத்தந்தை இயற்றி, வாசித்த செபம் பின்வருமாறு:
திருக்குடும்பத்திடம் செபம்
இயேசு, மரியா, யோசேப்பே,
உங்களுக்குள் இருக்கும்
உண்மையான அன்பின் மகிமையைத் தியானிக்கின்றோம்.
உங்களிடம் நம்பிக்கையோடு இறைஞ்சுகிறோம்.
நாசரேத்தூர் திருக்குடும்பமே,
எமது குடும்பங்களும்
ஒன்றிப்பின் இடங்களாக, செபத்திற்கென கூடிவரும் மேல்மாடி அறைகளாக,
நற்செய்தியின் உண்மையான பள்ளிகளாக
குட்டிக் குடும்பத் திருஅவைகளாக
அமையும் வரம் தாரும்.
நாசரேத்தூர் திருக்குடும்பமே,
வன்முறையின், பிரிவினைகளின்
அனுபவத்தை இனிமேல்
ஒருபோதும் குடும்பங்கள் எதிர்நோக்காதிருக்கட்டும்.
குடும்பங்கள் காயப்பட்டு அல்லது அவமானப்பட்டு இருந்தால்
அவை விரைவில் ஆறுதலையும் நற்சுகத்தையும் பெறட்டும்.
நாசரேத்தூர் திருக்குடும்பமே,
குடும்பத்தின் புனிதத்துவத்தை, அதன் மாறாத இயல்பை,
கடவுளின் திட்டத்திலுள்ள அதன் அழகை
நடைபெறவிருக்கும் ஆயர்கள் மாமன்றம்
அனைவரிலும் தட்டியெழுப்ப உதவி செய்யும்.
இயேசு, மரியா, யோசேப்பே,
எங்களின் இவ்வேண்டுதல்களைக் கேட்டு அவற்றை நிறைவேற்றும். ஆமென்.