இலங்கை கிளிநொச்சி நகரம் முன்பு விடுதலை புலிகளின் தலைநகரமாக இருந்தது. விடுதலை புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அங்கு தற்போது இலங்கை ராணுவம் முகாமிட்டுள்ளது. அவர்கள் கிளிநொச்சி மாவட்டம் முழுவதையும் ஆக்கிரமித்து கெடுபிடிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் தமிழ் பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வலைப்பாடு வேரவில், சிரஞ்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் மங்களராசா கத்தோலிக்க மத தலைமை இடமான வாடிகனுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழ் பெண்களை கட்டாய படுத்தி அரசு கருத்தடை செய்து வருகிறது. இதை தடுக்க கத்தோலிக்க சபை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது சம்மந்தமாக மாவட்ட சுகாதார அதிகாரி ரவீந்திரனிடம் கேட்டபோது, இந்த புகார் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.