அர்ப்பணிக்கப்பட்ட பெண்கள் புனித கன்னிமரியைப் போன்றவர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று அருள்சகோதரிகளிடம் கூறினார்.
காஸ்தெல் கந்தோல்ஃபோவில் அடைபட்ட துறவு இல்லத்தில் வாழ்கின்ற ஏழைகளின் கிளாரா அருள்சகோதரிகளை இவ்வியாழனன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், விண்ணரசின் கதவுகளுக்குப் பின்புறத்தில் மரியா நிற்கிறார் என்று கூறினார்.
மரியின் விண்ணேற்பு விழாவான இவ்வியாழனன்று காஸ்தெல் கந்தோல்ஃபோ சென்ற திருத்தந்தை பிரான்சிஸ், அந்நகரின் திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்ல வளாகத்தில் அடைபட்ட துறவு வாழ்க்கை வாழ்கின்ற ஏழைகளின் கிளாரா அருள்சகோதரிகளை முதலில் சந்தித்தார். இச்சந்திப்பு குறித்து வத்திக்கான் வானொலியில் பேட்டியளித்த அச்சகோதரிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்களுக்குக் கூறிய கருத்துக்களைத் தெரிவித்தனர்.
பெண்களுக்கான பிரான்சிஸ்கன் சபையான ஏழைகளின் கிளாரா சபை 1212ம் ஆண்டில் அசிசி நகர் புனிதர்கள் பிரான்சிஸ் மற்றும் கிளாராவால் தொடங்கப்பட்டது. காஸ்தெல் கந்தோல்ஃபோவில் திருத்தந்தையர் மாளிகை அமைக்கப்பட்டபோது, அங்கிருந்த அடைபட்ட துறவு இல்லம் 1631ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி ஏழைகளின் கிளாரா சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போரின்போது 1944ம் ஆண்டு பிப்ரவரியில் இவ்வருள்சகோதரிகள் இல்லம் குண்டுவீச்சால் தாக்கப்பட்டபோது அங்கிருந்த 18 அருள்சகோதரிகளும் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.