வில்லியனூர் மாதா குளத்தில் புனித நீர் ஊற்றும் திருவிழா

வில்லியனூர் மாதா குளத்தில் சென்னை – மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் ஆகஸ்ட் 4ம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறும் புனித நீர் ஊற்றும் நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

புதுச்சேரி வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்தன்னை ஆலயம் 142 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தமிழர் பண்பாட்டின்படி ஆலயத்திற்கு முன்பாக குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இயற்கையாக அமைந்துள்ள இந்த மாதா குளத்தின் கரைகள் 1924ம் ஆண்டு கட்டப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு மாதா காட்சி கொடுத்த மசபியேல் என்ற குகையின் அற்புத சுனையில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரானது வில்லியனூர் மாதா திருத்தல குளத்தில் ஆண்டுதோறும் கலக்கப்பட்டு வருகிறது.

இந்த புனித நீரை பயன்படுத்தும் பக்தர்கள் பலவிதமான கண் நோய்கள். தோல் வியாதிகள் மற்றும் உடல் நோய்களில் இருந்து குணமாகி வருகின்றனர். வில்லியனூர் மாதா குளத்தை தொடர்ச்சியாக 9 சனிக்கிழமைகளில் பக்தியோடு சுற்றி வந்து ஜெபிக்கும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறி வருகின்றன. இத்தகைய புதுமை மிகுந்த வில்லியனூர் மாதா குளத்தில் இந்த ஆண்டும் பிரான்ஸ் நாட்டின் லூர்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் கலக்கப்பட உள்ளது.

ஆகஸ்ட் 4ம் தேதி சனிக்கிழமையன்று வில்லியனூர் மாதா திருத்தலத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அன்று காலை 5.30 மணிக்கு திருப்பலி, அதனை தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெறுகிறது. காலை 6.45 மற்றும் 11.30 மணிக்கு சிறப்பு திருப்பலிகள் நடக்கவிருக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக மாலை 5,30 மணிக்கு சென்னை – மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு. டாக்டர். ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெறும் சிறப்புக் கூட்டு திருப்பலிக்கு பின்னர், பிரான்ஸ் லூர்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் வில்லியனூர் மாதா குளத்தில் ஊற்றும் சிறப்பு நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

இதன்பின்னர் இரவு 7.30 மணிக்கு லூர்து அன்னையின் ஆடம்பர தேர்பவனி மற்றும் நற்கருணை ஆசீருக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தல பங்குத் தந்தை பிச்சை முத்து தலைமையில் உதவி பங்குத் தந்தை வின்சென்ட் அமல்ராஜ், பங்கு பேரவையினர், இளைஞர் இயக்கத்தினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *