2018ம் ஆண்டில், இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறவுள்ளவேளை, இவ்வாண்டில் திருப்பீடத்தின் கவனமெல்லாம் இளையோர் மீது அமைந்திருக்கும் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.
2018ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முக்கிய நிகழ்வுகள் என்ற தலைப்பில், வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தையின் சிலே, பெரு நாடுகளின் திருத்தூதுப்பயணம், உலக குடும்பங்கள் மாநாடு, அமோரிஸ் லெத்தீசியா (Amoris Laetitia) எனப்படும் அன்பின் மகிழ்வு திருமடல், இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம், திருப்பீட தலைமையகச் சீர்திருத்தம் ஆகிய தலைப்புக்களில், தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இளையோரின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அவர்களின் நம்பிக்கைகள், அவர்களின் பலவீனங்கள் மற்றும் பயங்கள் ஆகிய இளையோரின் எல்லா நிலைகளும், 2018ம் ஆண்டில் திருஅவையில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார், கர்தினால் பரோலின்.
திருஅவைக்கும், இளையோருக்கும் இடையே புதிய உறவுகளை உருவாக்குவது குறித்த வழிகள் ஆராயப்படும் என்றும், இளையோர், குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்தில், இளையோருடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்குள்ள திருஅவையின் ஆவல் வெளிப்படும் என்றும், திருப்பீடச் செயலர் கூறினார்.
திருப்பீட தலைமையகத்தில் இடம்பெற்றுவரும் சீர்திருத்தம், திருத்தந்தை, நற்செய்தியை அறிவிப்பதற்கு, திருப்பீடம் உண்மையாகவே உதவுவதாக அமைய வேண்டும் என்றும் கூறினார், கர்தினால் பரோலின்.
கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டி, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.
உலக குடும்பங்கள் மாநாடு, அயர்லாந்து நாட்டின் டப்ளினில், வருகிற ஆகஸ்ட் 21 முதல் 26 வரையிலும், உலக ஆயர்கள் மாமன்றம், வத்திக்கானில், இளையோர், அழைப்பும் தேர்ந்துதெளிதலும் என்ற தலைப்பில், வருகிற அக்டோபர் 3 முதல் 28 வரையிலும் நடைபெறவிருக்கின்றன.