திருவிழிப்பு வழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

மரியன்னையோடு இணைந்து, மரியன்னையை நாடி வந்துள்ள அன்பு திருப்பயணிகளே, இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் என் உள்ளத்தில் சிறப்பான இடம் உள்ளது. இயேசு உங்களை என்னிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்துள்ளார் (காண்க. யோவான் 21: 15-17) என்பதை உணர்ந்து, உங்கள் அனைவரையும் அரவணைத்து இயேசுவிடம் ஒப்படைக்கிறேன். “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” (எண்ணிக்கை 6:24-26)

இந்த ஆசீர், கன்னி மரியாவில் முழுமை பெற்றது.அவரைப்போல் ஆண்டவரின் திருமுக ஒளியில் மூழ்கித் திளைத்தவர் ஒருவரும் இல்லை. மகிழ்வான, ஒளியான, துயரமான, மகிமையான மறையுண்மைகள் வழியே, நாம் செபிக்கும் செபமாலையில் அந்த அன்னையை தியானிக்கிறோம். ஒவ்வொரு முறையும் நாம் செபமாலையைச் செபிக்கும்போது, நம் தனிப்பட்ட, குடும்ப, மற்றும் உலக வாழ்வில் நற்செய்தி மீண்டும் நுழைகிறது.

எந்த மரியாவோடு நாம் திருப்பயணியாக இங்கு வந்துள்ளோம்? இயேசு சொல்லித்தந்த இடுக்கமான வழியான சிலுவைப்பாதையில் இயேசுவை முதன்முதலாகப் பின்தொடர்ந்து, பின்னர், அதை நமக்குச் சொல்லித்தரும் மரியாவா? நற்செய்தியில் சொல்லப்பட்ட, திருஅவையில் வணங்கப்பட்ட மரியாவா? அல்லது, நாமாகவே உருவாக்கிக்கொண்ட மரியாவா?

“மரியாவை நாம் நோக்கும்போதெல்லாம், அன்பு, பரிவு ஆகியவற்றின் புரட்சிகரமான பண்பை நாம் நம்புகிறோம். பணிவும், கனிவும், பலம் இழந்தோரின் பண்புகள் அல்ல, மாறாக, அவை, பலமுள்ளோரின் பண்புகள் என்பதை, மரியாவிடம் நாம் காண்கிறோம். நீதி, கனிவு இவற்றின் இணைந்த செயல்பாடு, ஆழ்நிலை தியானம், அயலவர் மீது அக்கறை இரண்டின் பிணைப்பு, ஆகியவற்றை மரியா கொண்டிருந்ததால், அவர் நற்செய்தியைப் பரப்பும் பணிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்” (நற்செய்தியின் மகிழ்வு 288)

மரியன்னையுடன் இணைந்து, அனைவரையும், அனைத்தையும் மன்னித்து, இறைவனின் இரக்கத்திற்கு அடையாளமாக நாம் ஒவ்வொருவரும் மாறுவோமாக. கன்னி மரியாவோடு கரம் கோர்த்து, இறைவனின் இரக்கத்தை நாமும் பாடுவோமாக!

இறைவா, மகிமை பெறுவதற்கு எனக்கிருக்கும் ஒரே நம்பிக்கை இதுவே: உமது அன்னை என்னைக் கரம்பிடித்து, தன் மேலாடைக்குள் புகலிடம் கொடுத்து, உமது இதயத்திற்கருகே சேர்ப்பாராக. ஆமென்.

Leave a Reply

Your email address will not be published.

Time limit is exhausted. Please reload CAPTCHA.