நெஞ்சம்நிறை நன்றி, நம்பிக்கையுடன் பயணத்தை நிறைவு செய்கிறேன்

AFP4570465_Articoloஇந்நாள்களில் நீங்கள் என்னைக் கவனித்துக் கொண்டது மற்றும் உங்களின் தாராள வரவேற்பு, நீங்கள் இயேசுவிடம் வைத்துள்ள அன்புக்கும், விசுவாசத்துக்கும் அடையாளமாக உள்ளன. இதேபோல், ஏழைகள், நோயாளிகள், வீடற்றவர் மற்றும் குடியேற்றதாரரிடமும் நடந்து கொள்ளுங்கள். வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் ஆதரவாக இருங்கள். குடும்ப வாழ்வு மீது அக்கறை காட்டுங்கள்.

இவையனைத்திலும் இயேசு உங்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் ஒருவர் ஒருவர் மீது அக்கறை காட்டும்போது இயேசுவுக்கே அக்கறை காட்டுகிறீர்கள். தங்களின் சாட்சிய வாழ்வைப் பகிர்ந்துகொண்ட குடும்பங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

ஒருவர் தனது வாழ்வுப் பயணம் பற்றி பொதுவில் பேசுவது அவ்வளவு எளிதல்ல. ஆயினும், அக்குடும்பத்தினர் நம் ஆண்டவர் முன்னிலையில் நேர்மையையும், தாழ்மையையும் வெளிப்படுத்தினர். குடும்ப வாழ்வின் அனைத்து வளமையிலும், பன்மைத்தன்மையிலும் அதன் அழகை நாம் ஒவ்வொருவரும் காட்டினோம்.

நலமான சமுதாயத்திற்கு குடும்பத்தின் முக்கியத்துவம் குறித்து இந்நாள்களில் நாம் செய்த செபமும், சிந்தனைகளும், குடும்பங்கள் தொடர்ந்து தூய வாழ்வில் வாழவும், அவை எத்தகைய சவால்களை எதிர்நோக்கினாலும் அவற்றின் மத்தியில் திருஅவை தங்களோடு இடைவிடாமல் தோள்கொடுத்து பயணம் செய்கின்றது என்று அதை நோக்கவும் உதவும் என்று நம்புகிறேன்.

நம் அனைவரையும் மறைப்பணி திருத்தூதர்களாக வாழவேண்டுமென்பதை நினைவுபடுத்தும் ஹூனிப்பெரோ செர்ரா அவர்களைப் புனிதராக அறிவித்த நிகழ்வு என் உள்ளத்தில் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தீமையின் புதிரான சக்தி பற்றிப் பேசுகின்ற, தரைமட்டமாக்கப்பட்ட உலக வர்த்தக மையம் இருந்த நினைவிடத்தில் பிறசமய சகோதர சகோதரிகளுடன் நின்று செபித்தது என் உள்ளத்தைத் தொட்டது. தீமை ஒருபோதும் இறுதியில் வெற்றியடையாது. ஆனால் இறைவனின் இரக்கம்நிறை திட்டத்தில் அன்பும், அமைதியுமே வெற்றி பெறும் என்பதில் நாம் உறுதியாய் இருக்கிறோம். இந்த அமெரிக்கப் பூமி அளப்பரிய கொடைகள் மற்றும் வாய்ப்புக்களால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மனித மற்றும் பொருளாதார வளங்களைப் பராமரிப்பதில் நீங்கள் நல்லவர்களாகவும், மனத்தாராளம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே எனது செபம். இந்நாள்களில் நாம் ஒன்றுசேர்ந்து செபித்த நேரங்களிலும், இங்கு இடம்பெறும் பல பிறரன்புப் பணிகளிலும் இறைமக்களின் விசுவாசச் சான்று வாழ்வைக் காண முடிந்தது.

இயேசு, அவரின் திருஅவை, நம் குடும்பங்கள், சமுதாயம் என்ற பெரிய குடும்பம் ஆகியவற்றுக்கான உங்கள் ஆர்வத்தை வற்றவிட வேண்டாம். இத்திருத்தூதப் பயண நாள்கள், நிலைத்த, தாராளக் கனிகளைக் கொணர்வதாக. நீங்கள் இறைவனிடமிருந்து இலவசமாகக் கொடைகளைப் பெற்றது போல அவற்றைத் தனிப்பட்ட சொந்த வாழ்வுக்காக அல்லமால், பிறருக்கு இலவசமாகக் கொடுங்கள். நெஞ்சம் நிறைந்த நன்றி மற்றும் நம்பிக்கையுடன் இப்பயணத்தை நிறைவு செய்கிறேன் என்று விமான நிலையத்தில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *