இத்தாலிய தேசிய இரயில் துறையின் ஒத்துழைப்புடன் திருப்பீட கலாச்சார அவை ஏற்பாடு செய்த “சிறார் இரயில்” என்ற நிகழ்வில் ஏறக்குறைய 200 சிறார் இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தனர்.
திருப்பீட கலாச்சார அவை நடத்தும் புற இனத்தார் மன்றம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்ற இந்நிகழ்வில் இரயிலில் வந்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியரை, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சிறார், உரோம், லத்தீனா, பாரி, த்ரானி ஆகிய நகரங்களில் சிறையிலுள்ளவர்கள். தங்களின் குடும்பங்களிலிருந்து கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு, சிறைச் சுவர்களுக்குள் வாழும் இவர்கள், அச்சூழல்களிலிருந்து வெளியேறி சுதந்திரமாக இந்த நாளில் இருப்பதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நாளின் நோக்கத்திற்கு ஒத்தது போல இச்சிறாரும் பல வண்ணங்களில் பட்டங்களைக் கொண்டு வந்திருந்தனர்.
மேலும், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறார் குழு ஒன்றையும், இவ்வெள்ளி மாலை 5 மணியளவில் வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் சந்தித்தார் திருத்தந்தை. 2, 3 வயதுச் சிறார், 7 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார் என கடுமையான நோய்களால் தாக்கப்பட்டுள்ள இவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இதனை UNITALSI அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.