திருச்சபையின் நலனுக்காகவும், பிறருக்காகவும் தங்கள் துன்பங்களை ஏற்று ஒப்புக்கொடுக்கும் நோயாளிகளையும் , சிறு குழந்தைகளையும் இந்நேரத்தில் நினைத்துப் பாருங்கள் என இவ்வியாழன் காலை திருப்பலி மறையுரையில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளையும், நோயுற்றோரையும், முதியோரையும், குடும்பத்திற்காகத் தியாகங்களைப் புரியும் தாய் தந்தையர்களையும் ஒருகணம் நினைத்துப் பார்ப்போம் என விண்ணப்பித்தார்.
நோயாளிகள் தங்கள் துன்பங்களை திருஅவைக்காகவும் பிறருக்காகவும் ஒப்புக்கொடுப்பதுபோல், தனிமையில் வாடும் முதியோரும் தங்கள் செபங்கள் மூலம் பங்காற்றுகின்றனர் என்ற திருத்தந்தை, பல்வேறு சிரமங்கள் மத்தியிலும் தங்கள் குழந்தைகளை பராமரித்து வளர்க்கும் பெற்றோரும் நம் நன்மதிப்புக்கு உரியவர்கள் என்றார்.
பங்குத்தளங்களில் பல்வேறு மேய்ப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அருள்பணியாளர்களையும் நினைத்துப் பார்ப்போம், ஏனெனில் இவர்களின் பணி திருஅவைக்குப் புனிதத்துவத்தை வழங்குவதுடன், மக்களுக்கு நம்பிக்கையையும் தருகிறது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் உறுதியான பாறையும் நம்பிக்கையுமான கிறிஸ்துவின் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாக, நம்பிக்கை, மன்னிப்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியை தனதாகக்கொண்ட இயேசுவில், நம்பிக்கை வைத்து, இத்திருவருகைக் காலத்தில், மகிழ்ச்சியோடு நடைபோடுவோம் என்ற அழைப்பையும் தன் மறையுரையில் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.