2020ம் ஆண்டுக்குள் நவீன அடிமைமுறையை ஒழிப்பதற்கான அறிக்கை ஒன்றில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் பன்னிரண்டுக்கு மேற்பட்ட உலகின் சமயத் தலைவர்கள் இச்செவ்வாயன்று கையெழுத்திட்டனர்.
உலக அடிமைமுறை ஒழிப்பு தினமான இச்செவ்வாயன்று, வத்திக்கானின் புதிய முயற்சியின்பேரில், உலகின் கிறிஸ்தவ, இஸ்லாம், யூதம், இந்து, புத்தம் ஆகிய மதங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து கையெழுத்திட்டுள்ளனர்.
வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற இத்தகைய நிகழ்வில், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபைத் தலைவர் பேராயர் Justin Welby, கான்ஸ்டான்டிநோபிள் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையின் பிரதிநிதி, இந்தியாவில் இருந்து இந்து மதம் சார்பில் அம்மா என்றழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயி, உட்பட 13 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மனித வர்த்தகம், பாலியல் தொழில், கட்டாயத் தொழில்முறை போன்றவை மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றம் என அறிக்கையிட்டு, இவற்றை ஒழிப்பதற்குத் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களின் சமூகங்களில் இவற்றை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக சமயத் தலைவர்கள் உறுதி எடுத்தனர். இந்த அடிமைமுறையில் சிக்குண்டு இருப்பவர்களை 2020ம் ஆண்டுக்குள் அவற்றிலிருந்து மீட்பதற்கும் இத்தலைவர்கள் உறுதி கூறினர்.
நவீன அடிமைமுறையில், மனித வர்த்தகம், கட்டாயத் தொழில்முறை, ஆட்கடத்தல், பாலியல் தொழில், மனித உறுப்புகள் வர்த்தகம், குழந்தைத் தொழிலாளர்முறை ஆகியவை உள்ளடங்கியுள்ளன. அதோடு, அனைத்து மனிதரும் சமமானவர்கள், அனைவரும் ஒரே விதமான சுதந்திரத்தையும் மாண்பையும் கொண்டிருக்கின்றனர் என்பதை மதிக்கத் தவறும் எந்த உறவுகளும் இதில் உள்ளடங்கும்.
Global Freedom Network (GFN) என்ற அமைப்பின் முயற்சியால் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. இவ்வமைப்பின் கணிப்புப்படி, நவீன அடிமைமுறையில் ஏறக்குறைய 3 கோடியே 60 இலட்சம் பேர் சிக்கியுள்ளனர் எனத் தெரிகிறது.
யூதமத ரபிகள் Abraham Skorka, David Rosen; தாய்லாந்து சென் குரு Thich Nhat Hanhவின் பிரதிநிதியாக Ven Bhikkhuni Thich Nu Chan Khong; மலேசிய பெரிய குரு Ven Datuk K Sri Dhammaratana எனப் பலர் கலந்துகொண்டனர்.