வத்திக்கானில் இம்மாதம் 5ம் தேதி தொடங்கியுள்ள குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் முதல் வார நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த ஐந்து நாள்களாக நடைபெற்ற இம்மாமன்றத்தின் ஏறக்குறைய எல்லா அமர்வுகளிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்து கொண்டவேளை, குடும்பம் குறித்த பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டன.
திருமணம் முறிவடைந்து, தாய் தந்தையர் பிரிந்து வாழும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஆதரவு, கைம்பெண்கள் மற்றும் தனிமையில் வாழ்வோருக்கு உதவுதல், தங்கள் திருமண வாழ்க்கையில் ஒப்புரவையும் குணப்படுத்தலையும் தேடும் தம்பதியர் என, பல்வேறு விவகாரங்கள் இம்மாமன்றத்தில் இடம்பெற்றன.
லெபனோன் உள்நாட்டுச் சண்டையில் கிறிஸ்தவப் பெண்கள் புரட்சிக்குழுவின் முன்னாள் தலைவரும், அந்நாட்டின் பெண்கள் நிறுவனத்தை ஆரம்பித்தவருமான Jocelyne Khoueiry போன்று, இம்மாமன்றத்தில் பார்வையாளர்கள் மற்றும் வல்லுனர்களாகப் பங்கெடுக்கும் ஆண்கள், பெண்களின் வாழ்க்கை அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
லெபனோனின் இறையாண்மையையும், நாட்டையும் பாதுகாப்பதற்காக, கடந்த காலத்தில் நாங்கள் போரிட்டோம், ஆனால், நாங்கள் எப்போதும் கனவுகண்ட விழுமியங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் எம் கலாச்சாரத்தையும் தனித்துவத்தையும் கட்டியெழுப்ப தற்போது போராடி வருகின்றோம் எனக் கூறினார் Jocelyne.
குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் பிரதிநிதிகள், வருகிற திங்களன்று குழுக்களாகப் பிரிந்து விவாதிக்கவுள்ளனர். இக்குழுக்களின் தலைவர்களை திருத்தந்தை அறிவித்துள்ளார்.
மேலும், இவ்வெள்ளி பிற்பகலில் நடந்த இம்மான்றப் பொது அமர்வில் 168 மாமன்றத் தந்தையர் பங்கெடுத்தனர். இதில் மாஸ்கோ முதுபெரும் தந்தையின் பிரதிநிதி Hilarion அவர்கள் உட்பட பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
253 மாமன்றத் தந்தையர் பங்குபெறும் இந்த 3வது உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் இம்மாதம் 19ம் தேதி நிறைவடையும்.